தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் பெய்துவந்த தொடர் மழை காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்த நிலக்கரியில் ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால், டிசம்பர் 6 ஆம் தேதிமுதல் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஐந்து பிரிவுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 55 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 10) முதல் 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்தாவது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. மின் தேவைக்கேற்ப பிற பிரிவுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அனல்மின் நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து பிரிவுகள் மூலம், 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 210 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்படுகிறது.