தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2017 அக்டோபர் மாதம் 20ஆம் தேதி, புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த கணேசன் (48) என்பவர் முன்விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டார். இது குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (26), மாரிமுத்துவின் தந்தை லெட்சுமணன் (60) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
இக்கொலைக்கு உடந்தையாக ஆனந்தகுமார் (31) என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றிவந்தவர். மருத்துவ விடுப்பில் சென்று பின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை கோரி மனு தாக்கல்செய்து தலைமறைவானார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தலைமறைவான காவலரை கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல் துறையினர் இன்று ஆனந்தகுமாரை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:பெண்ணின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய நபர் கைது