தூத்துக்குடி அய்யனடைப்பைச் சேர்ந்தவர் சிவகுமார் (41). நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து வந்த, சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த
2005-ஆம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் பச்சைபெருமாள் என்ற ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிவகுமார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து தனது காரில் தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அப்போது தனது அண்ணன் வழக்கறிஞர் ராம்குமாருடன் தென்பாகம் காவல் நிலையத்துக்கு பின்புறம் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிவகுமாரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். இதையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்தக் கொலை தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.