தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் சுப்பிரமணியம் வெடிகுண்டு வீசப்பட்டு பரிதாபமான நிலையில் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் இரங்கலையும் தெரிவித்தனர்.
உயிரிழந்த சுப்ரமணியன் உடல் அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்கு எடுத்து வரப்பட்டு, உறவினர்கள், காவலர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, சுப்பிரமணியன் உடல் ஊர்வலமாக காவலர்களின் அணிவகுப்புடன் இடுகாட்டிற்கு எடுத்து வரப்பட்டது.
இடுகாட்டில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் சுப்ரமணியன் உடல் அடங்கிய பெட்டியை தோளில் சுமந்தபடி எடுத்து வந்தனர்.
பின்னர் டிஜிபி திரிபாதி, சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஆட்சியர் நந்தீப் சந்தூரி, காவல் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, 30 குண்டுகள் முழங்க காவல் மரியாதையுடன் சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
![மலர்வளையம் வைத்து மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-03c-policemurder-honordgp-vis-7205101_19082020173518_1908f_02276_583.jpg)
அப்போது சுப்ரமணியன் மனைவி மற்றும் 10 மாத குழந்தை கண்ணீர் விட்டு கதறினர். இதனைப் பார்த்த டிஜிபி திரிபாதி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் சூழ்ந்த ஏனாம் பகுதி - பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு!