தூத்துக்குடி: விளாத்திகுளம் பகுதியில் லட்சக்கணக்கான விவசாய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. 10ஆம் நாள் திருவிழாவில் (மே.02) தேரோட்டம் நடைபெற்றது. அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தேரை இழுத்து விளாத்திகுளம் நகர்ப் பகுதியில் சுற்றி வருவது வழக்கம்.
இந்தத் தேர் திருவிழாவின் போது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் சமுதாயக்கொடியை தேரில் கட்ட வேண்டும் என காவல் துறையினர், அறநிலையத்துறை, வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம் செய்து கட்டியுள்ளனர். பின்னர் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மின் கம்பம் மீது கொடி தட்டியதாலும் கொடி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இதனைக் கண்டித்து அச்சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தேரை செல்லவிடாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், காவல் துறையினரின் ஆடைகளை சிலர் கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர். பின்னர், காவல் துறையினர் அந்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும்பரபரப்பை உண்டாக்கியது.
மேலும், கோயில் பொதுத்தேர் மீது சமுதாயக் கொடி கட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி புகாரின் பேரிலும், வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், காவல் துறையினர், திருத்தேரின் மீது ஏறி சமுதாயம் சார்ந்த கொடியைக் கட்டிய 100-க்கும் மேற்பட்ட நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295, 353, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோயிலுக்கு மன நிம்மதிக்காக சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இந்த அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளாகிச் சென்றனர். மேலும், அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே அந்த காலத்தில் தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்வு என்பது நடைபெற்றது. ஆனால், தற்போது அதிலும் இத்தகைய முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
இதையும் படிங்க: 4 வயது சிறுமி வன்கொடுமைச் சம்பவம்: தூக்கு தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிப்பு!