தூத்துக்குடி: விளாத்திகுளம் ஹை ஸ்கூல் தெருவைச் சேர்ந்த நெப்போலியன் என்பவரது மகன், பசும்பொன் முத்துராமலிங்கம் (38). இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பர நோட்டீஸைப் பார்த்து, நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கருதி, அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த காசி என்பவரின் மகன் ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், 4 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளார். அதன் பின்னர், பசும்பொன் முத்துராமலிங்கத்தை நம்ப வைப்பதற்காக போலியான பணி நியமன மற்றும் அனுமதி ஆணைகளை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து, கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை மொத்தம் 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ரகுபதிராஜன் ஏமாற்றி வந்துள்ளார்.
அதனை அடுத்து, தன்னை ரகுபதிராஜன் ஏமாற்றியதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், மோசடி சேய்த ரகுபதிராஜனைப் பிடிக்க, மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கல்குவாரியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை!
அந்த வகையில், மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும், ரகுபதிராஜன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ரகுபதிராஜனை, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரில் வைத்து கைது செய்தனர். அதன் பின்னர் நேற்று முன்தினம் (டிச.6) தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- IV-இல் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரகுபதிராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரகுபதிராஜன், இதேபோல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, சுமார் 2 கோடி ரூபாய் பணம் மக்களிடம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திருவாரூர் அருகே ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த அரசுப் பள்ளி மாணவர்!