கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஷேக் ஜவாத் தலைமையேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உஷா பெரியசாமி, ரவி, கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை. ரவிக்குமார் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிலுள்ள அனைத்து மதங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமாகும். இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறாது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அதற்கு அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதற்கு பாமகவின் பொதுக்குழுவில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் அக்கட்சி தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது" என்றார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவிடி சிக்னல் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
இதில், மத்திய அரசைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் கைதுசெய்து மாலை விடுவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக மாவட்டச் செயலாளர் இக்பால், குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இச்சட்டமானது மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது என்றும் அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடக்கூட மக்களை அனுமதிப்பதில்லை.
மாறாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களைத் துப்பாக்கியால் சுடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்த அவர், ஐநா சபையின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும். இல்லையேல் மக்கள் விரைவில் மத்திய அரசை தூக்கி எறிவார்கள் என்றார்.
தென்காசி
தென்காசி அருகேயுள்ள செங்கோட்டையில் ஐக்கிய ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின்போது மத்திய அரசை விமர்சித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசியக்கொடியை ஏந்தியவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அதிமுகவிற்கு மக்கள் தந்த பதில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி - உதயநிதி ஸ்டாலின்