வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கையெழுத்து பிரசார பயணம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டுவருகிறது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
நாடு முழுவதும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் டிராக்டர் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் தொந்தரவுகள் ஆகியவற்றை தடுத்திட வலியுறுத்தியும், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க கோரி நவம்பர் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குற்ற பின்னணி உடையவர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவது புதிதல்ல. ஏனெனில், தங்களை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜகவில் போய் சேர்கின்றனர். இங்குள்ள தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. மத்திய அரசு கைக்குள் செயல்படும் கருவியாக சிபிஐ செயல்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தக்க பதிலடியை பொதுமக்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொடுப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க:’கன்னியாகுமரி எங்கள் தொகுதி; நாங்கள்தான் போட்டியிடுவோம்’ - கே.எஸ்.அழகிரி