தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து ஆலை நிர்வாக தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி தரலாம் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இவ்விரு வழக்குகள் மீதான விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல் ஆஜராகி தனது வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியரியருமான பாத்திமாபாபு, தூத்துக்குடியில் இ-பாரத் செய்திக்காக அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு மோசடிகளை செய்து உள்ளது. குறிப்பாக ஆலை தரப்பில் நிறுவப்பட்ட காற்று தர கண்காணிப்பு கருவிகள் செயல்படவே இல்லை. ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலிருந்து குறிப்பிட்ட கால அளவுக்கு தரப்பட்ட காற்று தர அளவுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இதில் காற்றுத்தர கண்காணிப்பு கருவிகளில் மோசடி நடந்திருக்கலாம்.
ஏனெனில், 2015ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 13 காற்றுத்தர கண்காணிப்பு கருவி பொருத்த அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அந்த கருவிகளை பொருத்தாமல் வெறும் 8 மட்டுமே நிறுவியுள்ளனர். அந்த அவ்வாறு நிறுவப்பட்ட 8 காற்றுத்தர கண்காணிப்பு கருவிகளும் சரியாக செயல்படவில்லை அல்லது தரம் குறைந்த காற்றுத்தர உணர் கருவிகள் அதில் பயன்படுத்தப் பட்டுள்ளன என தெரியவருகிறது.
ஆகவே, மோசடி அல்லது தரமற்ற கருவிகளை உபயோகித்தது இவை இரண்டில் எதுவாக இருந்தாலும் அது குற்றமே. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு புகார் மனுவை அளித்துள்ளோம்.
வருகிற வியாழக்கிழமைக்கு ஸ்டெர்லைட் வழக்கு விவாதத்தை சுப்ரீம்கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது. அன்றைய தினத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலும் எதிர்த் தரப்பில் இருந்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். எனவே, மக்களின் உணர்வின் சட்டப்போராட்டத்துக்கு உயிர்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் போலீசார் அனுமதி தருவதில்லை. ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துவது ரீதியான காட்சிகளை நாங்கள் பார்கிறோம். அப்படியானால் அந்த போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
அனுமதி அளிக்கவில்லை எனில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது ஆலை மீது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக நடப்பது இல்லை. மக்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமை இனிமேலும் விட்டுவிட்டால் பறிபோய்விடுமோ என்ற உணர்வு, மக்களின் எழுச்சியின் காரணமாக போராட்டத்தின் மூலமாக வெளிப்படுகிறது.
அதேபோல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழக அரசும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆகவே, காவல்துறையினர் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்புக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர அவர்களை ஒடுக்கக்கூடாது. தூத்துக்குடியில் இன்னமும் ஒரு மயான அமைதி இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. சாதாரண நாட்களில் போலீசார் நடமாட்டம் இருப்பதற்கும் தற்பொழுது போலீசார் அதிக அளவில் இருப்பதையும் நாம் காணமுடிகிறது. இதை எப்படி அமைதி என்று கூறமுடியும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வாழ்வாதார பாதுகாப்பு உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக போராடுவதற்காக அவர்களின் மீது காவல்துறையினர் தேவையற்ற வழக்குப்பதிவு செய்து வருகிறது. இதில் சம்பந்தமில்லாத வழக்குகளில் கூட குற்றவாளியாக சேர்க்கப்படும் நிகழ்வு இருந்துவருகிறது. இம்மாதிரியான வழக்குகளிலிருந்து சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யவும், இந்த வழக்குகளை நீக்கம் செய்யவும் நாங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம், எனக் கூறினார்.