கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் கூறிய அவர், ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் பொங்கலை சிறப்பாக கொண்டாட அரசு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடத்தில் கிடைத்துள்ள வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது பொய்யான குற்றாச்சாட்டை சுமத்தி வருகிறார்.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, தயாநிதி உள்பட பல எம்எல்ஏக்கள் பெயரும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கரோனா தொற்று காலத்திலும் நாட்டிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். கரோனா காலத்திலும் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
'எனது உறவினருக்கு டெண்டர் விடவில்லை'
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து அரசு பணிகளுக்கான ஒப்பந்தங்களும் இ-டெண்டர் மூலமாக மேற்கொள்ளப்படுவதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு பணி டெண்டர் உலக வங்கியின் வழிகாட்டுதல்படி இணையவழியாக நடைபெறுகிறது. எனவே தமிழ்நாட்டில் டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது பொய்யானது. டெண்டர் எடுத்தது எனது உறவினர் என்பது எனக்குத் தெரியாது. நேரடியாக டெண்டர் அவருக்கு கொடுக்கவில்லை.
மக்கள் வாக்களிக்க வேண்டும்
திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு 200 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பணி முடிக்கும்போது 470 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்துள்ளனர்.
தேர்தலில் 200 தொகுதி என்ன 300 தொகுதியை கூட இலக்காக மு.க.ஸ்டாலின் வைத்துகொள்ளலாம். ஆனால் மக்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைக்கவில்லை அவருடைய வீட்டு மக்களுக்காகவே உழைக்கிறார்.
கருணாநிதி அவருடைய மகன் ஸ்டாலினை முதல்வராக்க நினைத்தார். ஸ்டாலின் தற்போது உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: ‘அதிமுகவை நிராகரிப்போம்’: தீர்மானத்தை நிறைவேற்றவுள்ள ஸ்டாலின்!