விருதுநகர் மாவட்டம் சாத்தூரையடுத்துள்ள தோட்டிலோவன்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகள் மல்லிகாதேவிக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு கன்னிகா(5), சுவாதி(3), கவின்ராஜ்(1) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மல்லிகாதேவி கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருப்பசாமியின் உறவினர்கள் மல்லிகாதேவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தற்போது, மல்லிகாவின் உடல் உடற்கூராய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில், மல்லிகாதேவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி இளம்பெண்ணின் உறவினர்கள் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கததால், ஆத்திரமடைந்த மல்லிகாதேவியின் உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'கீழடி ஆய்விடங்களை அரசுடமையாக்க வேண்டும் - எம். பி வலியுறுத்தல்