தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் உள்ள டி.எம்.பி காலனிப் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்குத் தேங்கி நின்றதில் பாதிப்படைந்த மக்கள் அனைவரும் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் உணவு கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று (டிச.20) காலை உணவுக்குப் பின்பு, முகாமில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட் உள்பட எதுவும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இத குறித்து அரசியல் கட்சியினருக்குத் தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டி.எம்.பி காலனியில் இருந்து வெள்ளம் தேங்கிய சாலைகளின் வழியாக நடந்தே வந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு, இரண்டு புறங்களிலும் மீட்புப் பணிக்குச் சென்ற வாகனங்கள் உள்பட பேருந்து, லாரி என அனைத்தும் வரிசைக்கட்டி நின்றன. அப்போது அந்த வழியாக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வந்துகொண்டிருந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் கனிமொழியின் வாகனத்தை இடைமறித்து முற்றுகையிட்டனர். அப்போது மக்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி, "உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறேன். அதற்கு முதலில் என்னை இங்கிருந்து அனுப்ப வேண்டும். அதைப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உணவு, பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்" என உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேரை தன்னுடன் அழைத்துச் சென்ற கனிமொழி, மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரியப்படுத்தி டி.எம்.பி காலனி பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரண பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது: அமைச்சர் சிவசங்கர் தகவல்!