தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார். இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்நிலையில், இவரது தலைமையில் பண்டாரம்பட்டி கிராம மக்கள் பலர் திரளாக இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் என்னும் பெயரில் ஒரு சிலர் ஸ்டெர்லைட் ஆலையிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருக்கும் கிராம மக்களிடையே பிளவினை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி அக்கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பண்டாரம்பட்டி கிராம மக்கள் கடந்த 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிவருகின்றனர் என்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தீயசக்திகள் சிலர் ஸ்டெர்லைட் ஆலையிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பண்டாரம்பட்டி ஊருக்குள் மக்களிடையே சாதி ரீதியாக பிளவினை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையினால் பண்டாரம்பட்டி மக்கள் ஒருபோதும் பயன்களை அடைந்தது கிடையாது. ஊருக்குள் பிளவினை ஏற்படுத்தும் தீய சக்திகள் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சிலர் மீதும், என் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
எனவே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் என்று சொல்லிக் கொண்டு பண்டாரம்பட்டி ஊர் மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.