தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாநேரிகுளம் பகுதியானது சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த 45 வருடம் பழமை வாய்ந்த குளம் ஆகும். வட்டார வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த குளத்தில், சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் வனத்துறை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் கருவேலமரம் மற்றும் பல்வேறு மரங்கள் நடப்பட்டிருந்தது.
தற்போது இந்த மரங்கள் அனைத்தும் 45 ஆண்டுகள் ஆனாலும், அசையாமல் கம்பீரமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் முக்கிய விஐபி ஒருவரின் ஆதரவுடன் "சங்கர் பட சூட்டிங் போல" பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு அந்த பகுதிக்குள் 3 லாரிகள், 2 ஜேசிபி மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவைகளுடன் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், ஏதோ அரசு பணி நடைபெறுவது போல அந்தப் பகுதி மக்களை நம்ப வைத்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான கருவேல மரங்கள் அனைத்தையும் டன் கணக்கில் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அந்த இடத்திற்குச் சென்று கேட்டபோது, போலியாக அச்சடித்த ஆவணம் ஒன்றை தயாரித்து இது அரசிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளது என்றும் அதனால் மரங்களை வெட்டி எடுப்பதாக அந்த பகுதி மக்களை அந்த திருட்டு கும்பல் நம்ப வைத்துள்ளனர். இப்படி பிரம்மாண்டமாக ஆவணங்களுடன் மரங்களை வெட்டுவதனால், அந்தப் பகுதி மக்களும் அதனை அரசு பணிக்காக தான் நடைபெறுகிறது என்று நம்பி உள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக இப்படித் திருட்டுத்தனமாக மரங்கள் அனைத்தையும் வெட்டி வெளிப்பகுதிகளுக்கு கொண்டு சென்று, ஒரு கிலோ 25 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும் இங்கிருந்து வெட்டிக் கொண்டு செல்லப்படும் மரங்கள் ஆனது செங்கல் சூளை மற்றும் அடுப்புக்கரி ஆகியவைகள் தயாரிக்க மொத்தமாக கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் சிலர் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் பொன்.முருகேசன் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பஞ்சாயத்தில் இப்படி எந்த ஒரு டெண்டருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்படும் இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடமும் அந்த கும்பல் இது முறையாக டெண்டர் எடுத்து தான் வெட்டப்படுகிறது என பஞ்சாயத்து தலைவரை ஏமாற்ற முயன்று உள்ளனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட பஞ்சாயத்து தலைவர், அந்த அனுமதி சீட்டை கொடுங்கள் எனக் கேட்ட போது அது போலியானது என தெரியவந்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அங்கிருந்த 3 டாரஸ் லாரிகள், 2 ஜேசிபிகள், ஒரு சொகுசு கார் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மெய்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் முதல் குற்றவாளியான உடன்குடி வேப்பங்காடு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அமிர்தா மகேந்திரன் என்பவர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளான திருமணி, அமல்ராஜ், முத்துக்கிருஷ்ணன், சதீஷ், சரத்குமார், அலெக்சாண்டர், வேல்சாமி, விஜயராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இப்படி பிரம்மாண்டமாக பொது இடத்தில் திருட்டு நடந்திருந்தும், அதனை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை உறுதி செய்த பின்னரும், இந்த பகிரங்க திருட்டில் ஈடுபட்ட 9 பேர் மீது கடமைக்கு வழக்கு பதிவு செய்து பின்னர் அவர்கள் அனைவரையும் காவல்நிலைய பிணையில் விடுவித்தது தான் கொடூரத்தின் உச்சம்" என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு" - பெண்ணின் பெற்றோர் கதறல்!