தூத்துக்குடி: சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56), அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காகத் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூ.40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூ.20 லட்சமும் ஆக மொத்தம் ரூ.60 லட்சம் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்குப் பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடைமானமாகக் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தக் காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01.2020 தேதியிட்ட உறுதிமொழிப் பத்திரத்தையும் மீண்டும் அடைமானமாகக் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிவசங்கர் மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தினரிடம், தங்களால் கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றும், தாங்கள் அடமானம் வைத்த கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தைத் திருப்பித்தந்தால் அந்த காட்டேஜை விற்று பணத்தைத் தந்து விடுவதாக நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து, அசல் ஆவணத்தை வாங்கிக் கொண்டு 20.01.2020 அன்று கொடைக்கானல் காட்டேஜை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
பிறகு பைனான்ஸ் நிறுவனத்திற்குப் பணத்தைத் திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்து, ரூ.1,08,61,020-க்கு காசோலைகள் கொடுத்துவிட்டு, காசோலையைப் பணமாக்கவிடாமல், மேற்படி காசோலைகள் தொலைந்துவிட்டதென்று அவரது வங்கிக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் (Stop Payment) என்று தெரிவித்து மோசடி செய்துள்ளார்.
மேலும் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம்க்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தனி அலுவலாக ஏற்கனவே சென்னை சென்றிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன் ஜோதி ஆகியோர் மேற்படி சிவசங்கருக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி அழைப்பாணை சார்பு செய்து நேற்று முன்தினம் (10.02.2023) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று (11.02.2023) பேரூரணி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் கடுங் குளிரிலும் தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!