கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் குரல் கொடுத்துவந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்த இறுதியாண்டு மாணவர்களில் 11 பேரை கல்லூரி நிர்வாகம் அதிரடியாக ஆறு மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவியர் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வளக் கல்லூரி சுயநிதி மீன்வள பாடப்பிரிவு தொடங்க எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதில் மாணவ-மாணவிகள் தங்களது கண்களில் கறுப்புத்துணிக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் என்றும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மீன்வளக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர், துணை ஆட்சியர் சிம்ரான்ஜித் கலோன் சிங், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், காலவரையற்ற விடுமுறையை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மாணவர்களை சந்தித்த கல்லூரி முதல்வர், மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய மறுத்து மிரட்டும் தொனியில் பேசியதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுதியில் தங்கியுள்ள மாணவ-மாணவிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாகவும், கல்லூரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவிகள் உள்ளதால் அவர்கள் உடனடியாக ஊருக்குத் திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை திரும்பப் பெறவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்களது போராட்டத்தை அறவழியில் தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.