தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அவ்வப்போது 'க்யூ' பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக கடத்தி செல்வதை தடுப்பதற்காக கடற்கரையோரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக நேற்று (நவ.30) தாளமுத்துநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் 'க்யூ' பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, அந்த வேனில் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 40 மூட்டைகளில் இருந்த சுமார் 1,500 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சரக்கு வேன் மற்றும் பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரனையில் தூத்துக்குடி, ஆரோக்கியபுரம், சுடலையாபுரத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஆதவன் (24) என்பவரை கைது செய்தனர்.
ஆதவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், படகு மூலம் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், கடத்தப்படவிருந்த 1,500 கிலோ பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 2500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்..!