ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டம் ஜனவரி மாதம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.
இந்த நிலையில் திட்டத்தின் முன்னோட்டமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்தீப் நந்தூரி, ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 கடைகளிலும் மென்பொருள் பண்பேற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 5 சதவீதம் கூடுதலாக ரேஷன் பொருட்கள் இருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சோதனை முறையில் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்படி ஊரகப் பகுதியில் ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அதே வருவாய் கிராமத்தில் உள்ள மற்ற கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. மாற்றாக பக்கத்து வருவாய் கிராமத்தில் உள்ள கடைகளிலோ, நகராட்சி பகுதி கடைகளிலோ, மாநகராட்சி பகுதிகளிலோ அல்லது மாவட்டத்தில் வேறு ஏதாவது ரேஷன் கடைகளிலோ பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல மாநகராட்சி பகுதிக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வருவாய் நிர்வாக பகுதிக்கு உட்பட்ட பக்கத்து கடைகளில் இந்த திட்டத்தின்படி பொருட்களை வாங்க முடியாது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவெனில் திட்டத்தை அமல்படுத்தும் பொழுது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்து இந்தியா முழுவதும் செயல்படுத்துவதே ஆகும். தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் மட்டும் இத்திட்டத்தின் பயன்களை பெற முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் மற்ற வெளியூர்வாசிகள், வெளி மாநிலவாசிகள் இத்திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துகையில் பயன்பெற முடியும். மேலும் இந்த திட்டத்தின்படி மண்ணெண்ணையை பயனாளிகள் பெற முடியாது. ஏனெனில், ஏற்கனவே அளவிடப்பட்ட மண்ணெண்ணை அளவுகளே அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். ஆகவே மண்ணெண்ணையை பொதுமக்கள் இந்த திட்டத்தின்படி வாங்க முடியாது எனக்கூறினார்.
இந்த திட்டத்தின்படி பயன்பெற்ற பொதுமக்களுள் ஒருவரான அஜிதா கூறுகையில், ஏரல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நான் சொந்த விஷயமாக கோரம்பள்ளம் வந்திருந்தேன். இந்நிலையில் ரேஷன் பொருள்கள் தேவைப்பட்டதன் அடிப்படையில் இங்கு உள்ள ரேஷன் கடையில் எனது ரேஷன் கார்டை பயன்படுத்தி இத்திட்டத்தின் மூலம் பொருள்களை வாங்கியுள்ளேன். இது எனக்கு மிகவும் பயனளிக்கிறது எனக் கூறினார்.