தூத்துக்குடி: 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி, லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்புப் படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் “காவலர் வீரவணக்க நாள்” அக்டோபர் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று (அக்.21) காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில், அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர்மூர்த்தி தலைமையில், ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அதற்காக விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இடையூறு இல்லாமல் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், காவல் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் 12 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தப்பட்டது. அதையும் உடனடியாக கண்டுபிடித்து விட்டோம்.
“மே ஹெல்ப் யூ” (may help you) என்ற ஒரு குழு அமைத்து இருக்கிறோம். பொதுமக்கள் பிரச்னையின்போது இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பெற்றோர்கள் கவனமாக கையைப் பிடித்து குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், மணியாச்சி லோகேஷ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குஜராத்தில் ஒருவர் கைது!