தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு தாலுகா அய்யனார் ஊத்து கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருள்களை நான்கு வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், முடி திருத்துபவர்கள், நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த காலம் முதலே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தினந்தோறும் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றே நேரடி ஆய்வுகளை மேற்கொண்டும், துறை வாரியாக நடைபெறும் பணிகளையும் கேட்டறிந்துவருகிறார்.
மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி அலுவலரை நியமித்து ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக தற்போது மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகளவில் இருந்தாலும், மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது என்றார்.
மேலும், மாநில அரசின் கோரிக்கைகளை ஏற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாகவும், இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும், உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு நிச்சயம் உதவும் எநவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனிப்பிற்கு இனிப்பு சேர்த்த புவிசார் குறியீடு - கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு வைர மகுடம்