தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணைச்செயலாளர் ரமேஷ்குமார் ஹூடா தலைமையிலான குழுவினர் இன்று (ஜனவரி 23) தூத்துக்குடி வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, 'ஆப் த மித்ரா' திட்டம் பற்றிய விளக்க கையேட்டை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணைச்செயலாளர் ரமேஷ்குமார் ஹூடா வெளியிட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரமேஷ்குமார் ஹூடா கூறுகையில், புயல், தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக முதல்நிலை தன்னார்வ களப்பணியாளர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த திட்டத்திற்கு 'ஆப் த மித்ரா' என பெயரிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு தேவையான தன்னார்வலர்களை ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று திரட்டி வருகிறோம். விரைவில் இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ்நாட்டில் 12 கடலோர மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் 5 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 'ஆப் த மித்ரா' திட்டத்துக்காக 300 தன்னார்வலர்களை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்துக்கு ஆட்தேர்வு குறித்த விரிவான வழிகாட்டுதல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னை, பிற இடங்களில் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேசிய அளவிலான மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தபடுவர். இந்த திட்டத்தை அடுத்த மாதத்திற்குள் தொடங்க விரைவான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.