தூத்துக்குடி: தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பில், விவசாயம் பாதுகாப்பு, விவசாய பொருளாதாரம் என்ற தலைப்பில் அனைத்து வங்கியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி பங்கேற்றார். மேலும் 2021-2022ஆம் ஆண்டின் வங்கியாளர்கள் திட்டமிடுதல் கையேட்டை வெளியிட்டார். இதனை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பெற்றுக்கொண்டார்.
மகளிர் சுய உதவிக் குழு
இதையடுத்து, இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, “தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கி, முன்னோடி வங்கி உள்ளிட்டவை இலக்கைத் தாண்டி செயல்பட்டுவருவது பாராட்டிற்குரியது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ அதைவிடுத்து வேறு வழிகளில் சென்றுவருகின்றன.
அதாவது மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்ப காலங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டன. ஆனால் தற்போது பாதை மாறிச் சென்றுவருகிறது. அதை மறுபடியும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களை முன்னேற்றும் வகையில் பெண்கள் சொந்த காலில் நிற்கக்கூடிய வகையில் மாற்ற வேண்டும்.
இணையதள வர்த்தகத்திலும், மகளிர், சுய தொழில்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கும் கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வருமா..? வராதா..? - ஒன்றிய அரசின் ரகசியம் என்ன..?