தூத்துக்குடி மாவட்டம் கோவில் குமரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மனைவி கல்யாணி (52). கல்யாணிக்கு கடந்த சில நாட்களாக இருமல், நெஞ்சு வலி, சளி தொல்லை ஆகியவை இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் கரோனா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் படுக்கை ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.29) காலை கல்யாணி திடீரென உயிரிழந்தார்.
இதுகுறித்து கல்யாணியின் கணவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்று (ஏப்.28) காலைவரை எனது மனைவி நன்றாக பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.29) காலை அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் அளவு திடீரென குறைக்கப்பட்டது. இது குறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு யாரும் விளக்கம் தரவில்லை. கல்லூரி முதல்வரிடம் சென்று புகார் அளித்தும் பதிலளிக்காமல், காவல் துறையினரை வைத்து விரட்டியடித்தனர்.
ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவே எனது மனைவி சற்று நேரத்திலேயே இறந்துபோனார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு இதே போலதான் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், அலுவலர்களும் ஆக்சிஜன் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மே 2 அன்று முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு