தூத்துக்குடி மாவட்டத்தில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து வழக்குகளை விரைவாக முடித்து தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத் முறையை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலமாக வழக்கில் இரண்டு தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டு தீர்வு காணப்படுகிறது. தூத்துக்குடியில் இந்த ஆண்டின் நான்காவது லோக் அதாலத் இன்று(நவ.12) நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தொடங்கிவைத்தார். இது குறித்து, மாவட்ட நீதிபதி குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவு படி, மாநில சட்ட பணிகள் வழிகாட்டு படி, தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும், மாபெரும் மெகா மக்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் மெகா மக்கள் முகாமில், 2ஆயிரத்து 897 வழக்குகளும், 2ஆவது முறையாக 3,800 வழக்குகளும், 3வது முறையாக 4ஆயிரத்து 579 வழக்குகளும் தீர்வு காணப்பட்டுள்ளது. இன்று (நவ,12) 4ஆவது (லோக் அதாலத்) மக்கள் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 3,657 வழக்குகள் தீர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நீதிதுறை நடுவர் மூலம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், பல வழக்குகள் தீர்க்கப்பட உள்ளது” எனக் கூறினார்.
முன்னதாக மக்கள் நீதிமன்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்சோ நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், லோக் அதாலத் தலைவர் உமா மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் செல்வகுமார், சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, முனிசிப் நீதிபதி சுமிதா, ஜே.எம் 1 நீதிபதி குபேர சுந்தர், ஜே.எம் 2 நீதிபதி கனிமொழி, ஜே.எம் 3 ஜெயந்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.