தூத்துக்குடி: தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் கண்ணன். இவரது, மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கண்ணன் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்திவந்தார். இந்நிலையில் கண்ணனின் மகள்களில் ஒருவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் தினமும் காதல் தொந்தரவு கொடுத்துவந்ததாகத் தெரிகிறது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பாக ஆட்டோவில் வந்த கண்ணனின் மகளை வழிமறித்த அந்த இளைஞர் காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்ணன் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் தகராறு செய்த இளைஞரைப் பிடித்து எச்சரித்து அனுப்புவதாகக் காவல் துறையினர் உறுதியளித்தனர். இந்நிலையில் நேற்றிரவு (பிப்ரவரி 24) தனது கடையில் கண்ணன் துணி தைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூவர் திடீரென தையல் கடைக்குள் புகுந்து அவரை சராமரியாக வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்துநகர் காவல் துறையினர், கண்ணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் கண்ணனின் உடலை வாங்க மறுத்தும், கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யக் கோரியும் தாளமுத்துநகர் சந்திப்புப் பகுதியில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
பொதுமக்களின் இந்தப் போராட்டத்திற்கு தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் நடத்தியது. பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் உள்ளிட்ட காவல் துறையினர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் குற்றவாளிகளைக் கைதுசெய்து சட்டப்படியான தண்டனை வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் தீவிரம் குறைந்தது. இதற்கிடையே, ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையாவும் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் தொடர்பாக சிஐடியு சங்க நிர்வாகி சங்கரன் கூறுகையில், “உயிரிழந்த குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதி வணிகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளைப் பலப்படுத்த வேண்டும்” என்றார். முன்னதாக இச்சம்பவத்தில் தலைமறைவான கொலையாளிகளில் ஜெயேந்திரன் (22), ரமேஷ் கண்ணன் (18) ஆகிய இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும், ஒருவரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு