தூத்துக்குடி மாவட்டம் சந்தையடியூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அபிமணி செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக் படித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் அபிமணி சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது தலைக்கவசம் அணிந்தபடி எதிரே நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் அபிமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கைப்பந்து விளையாட்டின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவனை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.