தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகத்தாய்.
இவர் நேற்று (ஏப்ரல்.19) தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, மகனின் மரணத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மார்ச் 14ஆம் தேதி கொடூரமான முறையில் எனது இளைய மகன் இசக்கிமுத்து கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனை சென்று நான் பார்த்தேன். அப்போது அவனின் உடலில் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டிருந்தது.
எனது மகன் மரணம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது இயற்கையான மரணமோ, விபத்தோ அல்ல. கொடூரமான கொலை என்று காவல் துறையினரிடம் கூறினோம். ஆனால் இதுவரை முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனது மகனை திட்டமிட்டு கொலை செய்தது திருநெல்வேலி மாவட்டம் மருகால்தலை கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்று நாங்கள் சந்தேகம் அடைகிறோம்.
நாங்கள் சந்தேகப்படும் நபரை காவல் துறையினர் உள்நோக்கத்தோடு விசாரணை செய்ய மறுக்கின்றனர். மேலும் எனக்கு இன்னொரு மகன் உள்ளார். அவனுக்கும் எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது. ஆகவே, முக்கிய குற்றவாளிகளை பிடித்து எனது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு