தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தாழபுஷ்பம், இவருடைய மகன் சின்னதுரை (35). கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது அருந்திவிட்டு தாழபுஷ்பத்தைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த தாழபுஷ்பம், டாஸ்மாக் மதுக்கடைகளைத் தமிழ்நாடு அரசு மூட வேண்டும், நாள்தோறும் குடித்துவிட்டு ரகளைசெய்யும் மகனைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில், ”வயது முதிர்வு காரணமாக எனது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் மகன் சின்னத்துரை தினமும் மது அருந்திவிட்டு என்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்திவருகிறான்.
ஊரடங்கு காரணமாக சில நாள்களாக மதுக்கடைகள் மூடியிருந்தபோது மது அருந்தாமல் திருந்தியிருந்த நிலையில், மீண்டும் மதுக்கடைகளை அரசு திறந்ததால்தான் நிம்மதி இழந்துள்ளேன். அவனது கொடுமை தாங்கமுடியாமல் மருமகளும் வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். என்னை துன்புறுத்திவரும் மகனைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” எனக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: முட்டிபோட்டு நூதன போராட்டம்