தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). சங்குக் குளிக்கும் மீனவரான இவர் இன்று காலை ஆறு மணிக்கு சக மீனவர்களுடன் பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், சங்கு எடுப்பதற்காக ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளார். ஆழ்கடலில் சந்திஸ்டன் உள்பட மேலும் இரண்டு பேர் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக தாமஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு வந்துள்ளது.
அந்த விசைப்படகின் சுருக்குமடி வலையில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சந்திஸ்டனை காப்பாற்றுவதற்காக அவருடன் சென்ற மீனவர்கள் கூக்குரலிட்டபோதும், விசைப்படகு மீனவர்கள் கண்டுகொள்ளாமல் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடலில் மூழ்கிய சந்திஸ்டன் கிடைக்காததையடுத்து, கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் இது குறித்து கடலோர காவல் துறையினருக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலில் மூழ்கிய சந்திஸ்டனை தேடும் பணியில் இரண்டு கடலோரக் காவல்படைப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கிடையே, விசைப்படகு மீனவர் தாமஸ் உள்பட எட்டு பேரை தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், கடலில் மூழ்கிய சங்குக்குளி மீனவர் சந்திஸ்டன் உடலை மீட்டு தரக்கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், திரேஸ்புரத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். இதன் காரணமாக அங்கு நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மீனவர் இசக்கிமுத்து கூறுகையில், கடலில் 25 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க வேண்டிய விசைப்படகு மீனவர்கள், 15 நாட்டிக்கல் தொலைவில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்துவருகின்றனர். இதனால் வலையில் சிக்கி இறந்துபோன சந்திஸ்டன் குடும்பத்துக்கு விசைப்படகு மீனவர்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சந்திஸ்டன் உடலை மீட்டு தரும்வரை நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லமாட்டோம் என்றார்.