தூத்துக்குடி மாவட்ட கவுன்சில் ஒப்புதல் பெறாமல் மாவட்ட வளர்ச்சிக்கான நிதியாக ரூ.7.50 கோடிக்கு டெண்டர் விடப்பட்டதை ரத்துசெய்யக்கோரி, திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் தாமதமாக ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி பதவியேற்றனர். மாவட்ட ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொறுப்பேற்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி மன்றங்களில் பதவி வகித்து வந்த தனி அலுவலர்களின் அதிகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சட்டப்படி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கான நிதி ரூ. 7.50 கோடியை மாவட்ட கவுன்சில் கூட்டம் நடத்தி முடிவு செய்து திட்ட ஒதுக்கீடு செய்யாமல் விளாத்திகுளம், புதூர் போன்ற பகுதிகளில் உள்ள குளங்கள் தூர் வாறுவதற்கு அலுவலர்களால் சட்டத்திற்கு புறம்பாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முழுமையான மாவட்ட ஊராட்சி நிர்வாகம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு புறம்பான செயலாகும். ஆளுங்கட்சியின் அறிவுறுத்தலால் சட்ட விதிகளுக்குப் புறம்பான செயலைச் செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டியும், இல்லையென்றால் நீதிமன்றத்தை நடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு