தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்று அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையொட்டி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநிலத்தில் கரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசின் இந்த சீரிய நடவடிக்கையின் மூலமாக தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடியில் 0.6 விழுக்காடு பேர் மட்டும் கரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர்.
ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் வருகின்ற 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வரவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மட்டுமல்லாமல், அரசு சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
மேலும், இந்த ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி திட்டப் பணிகளில் சீரிய நிலைக்கு செல்லும்" என்றார்.
இதையும் படிங்க: நாடு திரும்பிய 85,348 தமிழர்கள்: மத்திய அரசு தகவல்