தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், கோவிட்-19 சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தின் கீழ் நல உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 387 பயனாளிகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஏழு லட்சத்து 74 ஆயிரத்து 773 ரூபாயும் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
![ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-minister-kadampur-raju-byte-7204870_19062020142243_1906f_01341_1071.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார் திருநகர், கருங்குளம், தூத்துக்குடி ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தோர் கரோனா சிறப்பு நிதியுதவி பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு எதிராக மக்கள் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.
![மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கும் அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-minister-kadampur-raju-byte-7204870_19062020142243_1906f_01341_657.jpg)
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயலாற்றி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 715 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதியின் கீழ் 17.94 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட பல இந்தியர்களை கடற்படைக் கப்பல் அழைத்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்