தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கார்த்திகைபட்டி, குமரபுரம், குமரபுரம் காலனி, ஊத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, வீடு வீடாகச் சென்று 10 ஆண்டுகால சாதனைகளைத் துண்டுப் பிரதிகளாகத் தொகுத்து வழங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் பேசுகையில், "மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 திமுக, கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதுதான் அவர்களின் நிலை. நீங்கள் திமுகவினர் வாக்குக் கேட்டுவந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். நான் இங்கு அனைத்து சமூக மக்களுக்கான வேட்பாளராக உள்ளேன். சாதனையான ஆட்சி வேண்டுமா வேதனையான ஆட்சி வேண்டுமா என்பதை நீங்கள் முடிவுசெய்ய வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.25 கோடி வரி ஏய்ப்புசெய்த திமுக வேட்பாளர் எ.வ. வேலு