தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய்ப் பாதிப்பு, தடுப்புப் பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை மீட்பு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வருவாய் அலுவலர் விஷ்ணு சந்திரன், காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 'இந்தியாவிலேயே கரோனா பாதிப்பிலிருந்து வேகமாக குணம் பெறுகிற மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. கரோனாவுக்கு ஒரே மருந்து மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதுதான். எந்த வகையான மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்துக்கான அரிசி உள்ளிட்ட பொருள்களையும் இலவசமாக மக்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அல்லாத அமைப்புசாரா தொழிலாளர்கள் 96 ஆயிரத்து 963 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 544 மீனவர்களுக்கு மீன்பிடித் தடைகால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வெளி மாநிலத் தொழிலாளர்கள் 3 ஆயிரத்து 700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகிறவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க 600 படுக்கை வசதியுடன் தயார் நிலையில் முகாம்கள் உள்ளது' எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஆய்வுக்கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல்தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முடக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடி விநியோகம்!