தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ரேவா பிளாசா சந்திப்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைய உள்ள அங்கன்வாடி மையத்துக்கும், ரூ.8.50 லட்சம் மதிப்பில் நகராட்சி தினசரி சந்தை பிரதான நுழைவு வாயிலை அகலப்படுத்தி புதிய நுழைவு வாயில் கட்டும் பணிக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்கின்றனர். திமுகவை போல ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டம் நடத்தினால் கிராமத்தின் ஒற்றுமை கேள்விக்குறியாகும். மக்கள் அமைதியாக வாழக் கூடாது. சட்டம் ஒழுங்கு சீர் கெட வேண்டும் என்ற எண்ணம் திமுகவினருக்கு உள்ளது. பதவி வெறியில் திமுகவினர் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஜனவரி 27இல் சசிகலா வெளியே வரக் கூடிய சூழலில் அதிமுக பொதுக்குழுவில் அது குறித்து விவாதிக்கப்படுமா முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா எனப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, “வழக்கமாக டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெறும். இந்த ஆண்டு கரோனா காலக்கட்டம் என்பதால் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரவிருப்பதால் தேர்தல் கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசப்படும். சசிகலா குறித்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.
மேலும், பெண்களை கேவலப்படுத்துவது திமுகவிற்கு கைவந்த கலை. அதுதான் திமுகவின் தொழில் எனவும் கூறினார்.
இதையும் படிங்க...திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் மையம் திறப்பு!