தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை காய்கறி கடையில் ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டிலே தொடர்ந்து 6 ஆண்டுகளாக தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை காய்கறி கடை முதலிடத்தை வகித்து வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு ரூ. 2.50 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அனைத்துத்திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு இதுவே சான்று. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏக்கள் அழைக்கப்படுவதில்லை என கனிமொழி குற்றஞ்சாட்டியிருப்பது தவறானது.
அனைத்து அரசு விழா அழைப்பிதழ்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் அச்சிடப்படுகின்றன. அவர்களுக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்படுகிறது. கனிமொழி தூத்துக்குடிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பதுபோல வந்து செல்கிறார். எனவே, அரசியலுக்காக குற்றஞ்சாட்டுவது தவறான செயல்.
ஓடிடி தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகிய மூன்று தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். மத்திய அரசு படப்படிப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சினிமா படப்படிப்பு நடத்த அனுமதி வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வரும் குழப்பங்களை பட்டியலிடவே முடியாது - கனிமொழி