தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் 41 கி.மீ. நீளத்துக்கு பேவர் பிளாக் சாலை, கான்கிரீட் சாலை, வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் 16 இடங்களில் பூமி பூஜை நடைபெற்றது.
இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜு பேசுகையில், "தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இன்றைக்கு ஆண்டுதோறும் பல லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கைப் பருவமாற்றத்தைக் கருத்தில்கொண்டு வேளாண் பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவதை அரசு நிறைவேற்றுகிறது என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். எதிர்க்கட்சி கூறும் நல்ல கருத்தாக இருந்தால் அதை அதிமுக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதுதான் அர்த்தம்.
எண்ணற்றத் திட்டங்களைச் செயல்படுத்தியதால் இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 2021இல் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் மலரும் என்பது நிதர்சனமான உண்மை. மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் மு.க. ஸ்டாலின் உளறுகிறார். ரியல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவை கதிகலங்க வைக்கிறதா சசிகலா வருகை?