தூத்துக்குடி மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், அவர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகிலேயே வழங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடை 9 கோடிய 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கம் மூலம் 84 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று விநியோகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 905 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சத்திரப்பட்டி அருகேவுள்ள மேல பாண்டவர்மங்கலம், எட்டையாபுரம், பட்டம்மாள் தேவி ஆகிய பகுதிகளில் நகரும் அம்மா நியாயவிலைக் கடை வாகனங்களை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் இன்று (செப்.25) தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, “தமிழ்நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் பிரச்னை என்று வந்தால், அதனை நிர்வாகிப்பதற்கு பதிவுத்துறை மூலம் பதிவாளர் நியமிப்பது வழக்கம்.
அதேபோல், தான் நடிகர், தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கால அவகாசம் உள்ளது. அவர்கள் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தால், சுமுகமான தீர்வுக்கு வந்தால் அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.