தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பரபுரம், நாலாட்டின்புதூர் ஆகிய கிராமங்களில் குடிமராமத்து பணிகளுடன், லெட்சுமி காலனியில் குடிநீர் விநியோகத்தினையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவில்பட்டி நகரில் ஏழு கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுகவினர் தாங்கள் நான்கு, ஐந்து லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக தொடர்ந்து சொல்லிவந்தனர். ஆனால் வேலூர் தொகுதியில் அப்படிப்பட்ட ஒரு நிலை நிச்சயமாக வராது என்று தெரிவித்திருந்தோம். அதை போல் வெறும் 8000 சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இதில் ஒரு பெரிய வித்தியாசமே கிடையாது, நாடளுமன்ற தேர்தலில் திமுக அளித்த தவறான வாக்குறுதிகளின் விலைவுதான் வேலூரில் அக்கட்சியின் சாயம் வெளுத்துப்போய்யுள்ளது.
ஆகையால் நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தலை பொருத்தவரை திமுகவிற்கு வெற்றியும் இல்லை, எங்களுக்கு தோல்வியும் இல்லை! 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' அவ்வளவுதான். மக்கள் அபரிமிதமான ஆதரவு எங்களுக்கு அளித்திருக்க நாங்கள் இதை தோல்வியாக நினைக்கவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னை குறித்து கடந்த 1984இல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது என்ன நிலைப்பாட்டினை எடுத்தாரோ, அதே நிலைப்பாட்டினைதான் தற்போது அதிமுக எடுத்துள்ளது" என்றார்.