தூத்துக்குடி: உலக மீனவர் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் தொழிலாளர்கள் சார்பில் உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, மீனவ தொழிலாளர்களுக்கான மருத்துவ முதலுதவி மையம் மற்றும் புதிய ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றைத் தொடங்கி வைத்தார்.
உலக மீனவர் தினத்தை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய அவர், 2,500 விசைப்படகு தொழிலாளர்களுக்கு ரெயின் கோட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது, “தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை, கன்னியாகுமரி, உவரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கும் வழங்கப்படும்.
அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். ஆபத்து காலங்களில் தங்களை காத்துக் கொள்வதற்கு முதலுதவி பயிற்சியை மீனவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் காப்பீட்டு வசதியினைப் பெறும் வகையில், வருகிற 25ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும்.
இதுமட்டுமின்றி, தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு கூடுதலாக டீசல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்” என்று கூறினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் தர்ம பிச்சை, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மீனவர் நல வாரிய உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காகவும், மீன்வளம் கிடைக்க வேண்டியும் உலக அமைதி வேண்டியும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில் விசைப்படகு தொழிலாளர் சங்கத் தலைவர் ஜவகர் உள்ளிட்ட ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உலக மீனவர் தினம்: மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் படும் இன்னல்கள், அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?