தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 12 பேர் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இந்திய - சீன பிரதமர் வருகையையொட்டி சீன பிரதமரை வரவேற்கும் பொருட்டு நாங்குநேரியில் முகாமிட்டிருந்த தமிழ்நாடு அமைச்சர்கள் தற்போது, சென்னை புறப்பட்டனர்.
தூத்துக்குடியில் விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னைக்கு புறப்படுவதற்காக வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், இடைத்தேர்தல் பரப்புரையில் மக்களோடு மக்களாக இருந்து திண்ணைப் பரப்புரை மேற்கொண்டுவருகிறேன். அப்பொழுதுதான் மகிழ்ச்சியாக பரப்புரை செய்திட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், மாமல்லபுரத்தை கண்டுபிடித்த நரசிம்ம பல்லவன் பெருமையையும் தமிழனின் கலையறிவையும் இன்று உலகறிய எடுத்துச் செல்லும் பெருமையும் பிரதமர் மோடியையே சாரும் என்றார்.