தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட நொச்சிகுளம், புதுக்கோட்டை, அரசன் குளம் ஆகிய பகுதியில் நகரும் நியாயவிலைக் கடையை மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
அதேபோல் கோவில்பட்டி சண்முகா நகர் பகுதியில் ரூ.1.23 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், ரூ.2.60 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட மண்டல வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “சாதாரண மக்களின் கனவு நனவாகும் நிலையை மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.
மூன்றாண்டுக்கு ஒருமுறை திரையரங்குகள் உரிமம் புதுப்பிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படவுள்ளது. வி.பி.எப். பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றைய தினம் அவர்களுக்குள் முடிவு எட்டப்பட்டது. இனி புதிய திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என்ற நிலை வந்துள்ளது.
அதிமுக திமுக இரண்டும் மாநில கட்சிகள், தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது. அரசு சார்பில் அமித் ஷாவை உள் துறை அமைச்சர் என்ற நோக்கில்தான் நாங்கள் வரவேற்போம். அமித் ஷா வருவதால் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்னை என்று பாஜக மாநிலத் தலைவர் கூறுவது அவரது சொந்த கருத்து” எனத் தெரிவித்தார்.
சசிகலா விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வரட்டும் வரட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.