தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் கா.மு.சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு நான்காவது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ள அவருக்கு எதிரான வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு தற்போது பாஜகவில் இணைந்துள்ள கேஆர்எம் ராதாகிருஷ்ணன் முதல் குற்றவாளி ஆவார்.
அதேபோல் திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த மறைந்த பெரியசாமி, அவரது மனைவி எபனேசர், மகள் அமைச்சர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மருமகன் ஜீவன், மகன்கள் ராஜா, ஜெகன் ஆகிய 6 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 1996–2001–ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கீதாஜீவனின் கணவர் ஜீவன், சகோதரர் ராஜா இன்று ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு