தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகம் உள்ளது. இங்கு தேநீர் கடை, ஓட்டல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு சென்ற 35 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வரும் வியாபாரிகள் மாநகராட்சிக்கு வாடகை பணம் கொடுத்து வந்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிதம்பரநகர் சந்தை பகுதியில் நவீன வணிக வளாகம் கட்ட மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் அங்குள்ள வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று (அக.9) மாநகராட்சி அலுவலர்கள் சந்தை வளாகத்தில் மின் இணைப்பை துண்டிப்பதற்காக வந்தனர்.
அப்போது வியாபாரிகள் அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன்பேரில் போராட்டமானது கைவிடப்பட்டது. ஆனாலும் தங்களுக்கு தற்காலிகமாக கடைகள் அமைக்க இடம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பர நகர் சந்தை குத்தகை காலம் 2022ஆம் ஆண்டு வரை இருப்பதால் வியாபாரிகள் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஜவுளி கடைக்குச் சீல் வைத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்!