தூத்துக்குடியில், கரோனா ஊரடங்கு தொடர்பாக நடந்த வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய வியாபாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், “அத்துமீறி கடைக்குள் நுழைந்து முகக்கவசம் அணியாதவர்களைப் புகைப்படம் எடுக்கிறோம் எனக்கூறி கடையில் வேலை பார்க்கக்கூடிய பெண்களைப் புகைப்படம் எடுக்கின்றனர்.
இவர்கள் மாநகராட்சியில் நிரந்தர ஊழியர்கள் கிடையாது; தற்காலிக ஊழியர்கள். எனவே காவல் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரோனா காலத்தில் அரசினுடைய கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் துறை ஒத்துழைப்போடு கடைப்பிடிக்கிறோம்” என்றனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரசினுடைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தாங்களாகவே முன்வந்து முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் அபராதம் விதிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது 1200 பேருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. வியாபாரிகள் அனைவரும் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல்