நாசரேத் வகுத்தான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசிங் மனைவி சாந்தி (53), இவர் நாசரேத் ரயில்வே நிலைய சாலையில் உள்ள காதி கிராஃப்ட் கடையில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று ஒருவர் காதி கிராஃப்ட் கடைக்கு பொருள்கள் வாங்குவதுபோல் வந்து கடை கல்லாவிலிருந்த சுமார் 9,200 ரூபாயைத் திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து, சாந்தி அளித்த புகாரின்பேரில் நாசரேத் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணத்தைத் திருடியவர் சிவத்தையாபுரம் சாமி கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் பிரபுவை இன்று கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து 9,200 பணத்தையும் கைப்பற்றி, திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர்.