தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட சாயர்புரம் ஊரைச் சேர்ந்தவர் ஆனந்த். இயற்கை விவசாயியான இவர் மதுரம் இயற்கை தேன் பண்ணை என்ற பெயரில் முருங்கைத் தேன் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறார். கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய இரண்டு ஊர்களிலும் முருங்கை தோட்டங்களில் தேனீ பெட்டிகளை வைத்து முருங்கைத் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஆனந்த், பி.ஏ பொருளியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்டவரான ஆனந்த், ஆரம்ப காலத்தில் மதுரையில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்து வந்தார். அறுவடை செய்யப்படும் காளான்கள் ஒரு நாளைக்குள் விற்றுவிட வேண்டும் என்பதால் காளான் விற்பனையில் ஆனந்தால் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நண்பர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் இயற்கைத் தேன் வாங்கி விற்பனை செய்யும் டிரேடராக தன் பயணத்தை தொடங்கியுள்ளார். நாட்கள் செல்லச்செல்ல வாங்கி விற்கும் தேன் உண்மையில் இயற்கையானதுதானா? என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்த புகார்களும் ஆனந்துக்கு வரவும் தொழிலில் நம்பிக்கையையும் நாணயத்தையும் காப்பாற்ற தாமே தேனை உற்பத்தி செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

தேனீ வளர்ப்பு குறித்து கோயம்புத்தூர் இயற்கை வேளாண் கல்லூரியில் ஒரு வார கால பயிற்சி எடுத்துக்கொண்ட ஆனந்த், தேனீ வளர்ப்பு குறித்த அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கினார். இதற்காக கன்னியாகுமரியைச் சேர்ந்த தேன் உற்பத்தியாளர் ஒருவரிடம் ஒரு மாதம் சம்பளம் எதுவும் இல்லாமல் உதவியாளராக மட்டும் பணியில் சேர்ந்து தேனீ வளர்ப்பு குறித்து அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தனது சொந்த ஊரான சாயர்புரத்துக்கு வந்த அவர், வெப்பமிகு பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் எப்படி தேனீ வளர்ப்பில் ஈடுபடுவது என்ற குழப்பத்தில் இருந்தபொழுதுதான் தோன்றியுள்ளது முருங்கைத் தேன் உற்பத்தி யோசனை.

சாயர்புரம், ஏரல், திருச்செந்தூர், சோனங்காட்டு விளை, உடன்குடி, ஆறுமுகநேரி, ஆரோக்கியபுரம் உள்பட அதன் சுற்று வட்டார கிராமங்களில் முருங்கை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. முருங்கை சீசன் காலங்களான ஜனவரி முதல் மார்ச் வரையிலும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம்வரையிலும் முருங்கை பூ அதிகம் பூக்கும் என்பதனால் முருங்கை தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து தனி மலர் தேனாக முருங்கைத் தேன் உற்பத்தியில் ஈடுபடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி சாயர்புரத்தில் முருங்கை விவசாயிகள் அனுமதியுடன் அவர்களின் தோட்டத்தில் வெறும் 10 பெட்டிகளை வைத்து முருங்கைத் தேன் உற்பத்தியாளராக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார். இன்று 1,200 தேனீப் பெட்டிகளை வைத்து வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ தேன் உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் முருங்கைத் தேனை சந்தைப்படுத்தி அசத்திவருகிறார்.

தேன் விற்பனையிலும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசத்தை தர வேண்டும் என்பதற்காக முருங்கைத் தேன் மட்டுமல்லாமல் நாவல் தேன், மலைத்தேன், கொம்புத்தேன், பலமலரத்தேன் உள்ளிட்டவைகளையும் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். மற்ற தேன்களை போலத்தானே முருங்கை தேனும்? என கேட்டால் அதற்கு இல்லை, என்ற பதிலை உச்சாணி தலையில் அடித்தார் போல் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார், ஆனந்த்.
முருங்கை இயல்பாகவே மனிதனுக்கு நல்ல மருத்துவ குணமிக்க உணவுப் பொருளாக பயன்படுகிறது. முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, காய், பூ உள்ளிட்டவைகள் உடலுக்கு இரும்புச்சத்தை தருவதுடன் சுவாச பிரச்னை, கல்லீரல் பிரச்னை, கர்ப்பப்பை நோய், ஆண்மை குறைவு உள்ளிட்ட குறைபாடுகளுக்கும் நல்ல தீர்வை அளிக்கும் மருந்தாக விளங்குகிறது. எனவே முருங்கை தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து உற்பத்தி செய்யப்படும் முருங்கை தேனிலும் அதே சத்தை பிரதிபலிக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் முருங்கை தேனை காட்டிலும் சிறப்பான தேன் இல்லை என்றுகூட சொல்லலாம்.
ஏனெனில் மற்ற தேன்களைவிட முருங்கை தேனின் அடர்த்தி அதிகம். மேலும் இதன் சுவையும் மற்றவைகளில் இருந்து தனித்துவம் பெற்றிருக்கும். அதனாலேயே இதற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.
சந்தையில் முருங்கைத் தேனுக்கு உள்ள வரவேற்பினால் நாளுக்கு நாள் அதன் தேவையும் இரட்டிப்பாகி வருகிறது. தேவை அதிகம் இருக்கும் சமயத்தில் உற்பத்தியும் ஜோராக நடைபெற்றால் சரியான நேரத்தில் மக்களுக்கு தரமான பொருளை வழங்க முடியும். தற்பொழுது நிலவிவந்த கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தேன் உற்பத்தியிலும் விற்பனையிலும் சற்று சுணக்கத்தை சந்தித்திருக்கிறார் ஆனந்த்.
ஒரு தோட்டத்தில் பரப்பளவை பொறுத்து 20 முதல் 30 பெட்டிகளை வைத்து தேன் உற்பத்தியில் ஈடுபடலாம். சாயர்புரம் பகுதியில் சுமாராக 10 தோட்டங்களில் ஒவ்வொரு தோட்டத்துக்கும் தலா 30 பெட்டி என்றால்கூட 300 பெட்டிகளில் தேன் உற்பத்தி நடைபெறுகிறது. கரோனா காலகட்டத்தில் முருங்கை தேனின் தேவை அதிகமானதுடன் அதற்கான விலையும் இரட்டிப்பானது. சாதாரணமான காலங்களில் கிலோ ரூ.300 முதல் 600 வரை விற்பனையான முருங்கைத் தேன் கரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கிலோ தேன் ரூ.800 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தேனீ வளர்ப்பு முறையில் மற்ற தேன் உற்பத்தி போலவே முருங்கைத் தேனும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் முருங்கை பூவில் இருந்து மட்டும் தேனீக்கள் தேனை எடுத்து சேமிப்பதால் தனி மலர் தேனாக இது உற்பத்தி செய்யப்படுகிறது. தோட்டத்தில் தேனீப் பெட்டிகள் வைப்பதன் மூலமாக விளைச்சலும் 30 சதவீதம் அதிகரிக்கிறது. ஏனெனில் தேனீக்கள் தேன் எடுப்பதற்காக ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு செல்லும்பொழுது இயற்கையாகவே மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது. மகரந்தச் சேர்க்கையின் காரணமாக மரத்தில் பூ பூப்பது அதிகரிப்பதுடன் நல்ல விளைச்சலும் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடிவதால் தோட்டங்களில் தனி மலர் தேனீ வளர்ப்புக்கு விவசாயிகளிடம் தடை ஏதும் இருப்பதில்லை.
தேனீ வளர்ப்புப் பெட்டிகள் ஒன்றேகால் அடி உயரம் கொண்டவையாக உள்ளது. இந்தப் பெட்டிக்குள் இரண்டு அறைகள் வைக்கப்பட்டுள்ளன. பெட்டியின் கீழ் உள்ள அறை புழு அறை, மேல் அறை தேன் அறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழுள்ள அறையில் ஆறு சட்டங்களில் ராணித் தேனீ, ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்கள், புழு அறை சட்டங்களில் உற்பத்தி பணியில் ஈடுபடுகின்றன. ராணித் தேனீ இடும் முட்டைகளை அடைகாத்து புழுப் பருவம், கூட்டுப்புழு பருவம் என 15 நாட்களுக்கு பிறகு தேனீயாக வெளிவரும் வரை அதற்கு தேவையான உணவினை வேலைக்கார தேனீக்கள் எடுத்துக்கொடுக்கும். வெளியில் சென்று தேனை எடுத்துவருவதும் வேலைக்கார தேனீக்களின் பணிதான். ஆண் தேனீக்கள் ராணித் தேனீயுடன் வானில் இணை சேர்வர்தற்கான பணி மட்டுமே செய்யும்.
பெட்டியின் மேல் அறையில் தேன் சேகரிப்பு நான்கு சட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில்தான் தேனீக்கள் தேன் சேகரிப்பில் ஈடுபடுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும் பெட்டிகளை சோதனை செய்வது அவசியமாகும். ஏனெனில் ஓனான், பல்லி போன்றவைகளால் தேன் பெட்டிகளுக்கு ஆபத்து நேரிடும் என்பதனால் பெட்டிகளை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். அறுவடை காலங்களில் நன்கு தேன் சேர்ந்த அடைகளை பல் சக்கரத்துடன் கூடிய தேன் பிரிப்பு குடுவைக்குள் எதிரெதிரே வைத்து சுழற்ற வேண்டும். இப்படி செய்வதால் அடையிலிருந்து சுலபமாக தேன் வெளியேறி குடுவைக்குள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் சேகரிக்கப்பட்ட தேன் வடிகட்டப்பட்டு ஈரப்பதம் குறைந்த பின் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் தேன் ஆண்டு கணக்கில் கெடாமல் இருக்கும். கலப்படமற்ற இயற்கையான தேன் உற்பத்திக்கு இருக்கும் வரவேற்பு பல இளைஞர்களிடமும் தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவித்துள்ளது. அவ்வாறு தேனீக்கள் வளர்ப்பதில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகளையும் ஆனந்த் வழங்கிவருகிறார்.
இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், " புதிதாக ஒரு இடத்தில் தேன் பெட்டிகளை வைத்து தேன் உற்பத்தியில் ஈடுபட்டால் தேனீக்கள் அவ்விடத்தில் பழகுவதற்கு 5 அல்லது 6 நாட்கள் வரை ஆகும். இந்த காலகட்டத்தில் டம்ளர் ஒன்றில் சர்க்கரை நீர் கரைசலை பெட்டியின் மேல் வைத்துவிட வேண்டும். இவ்வாறு வைப்பதனால் தேனீக்கள் டம்ளரில் உள்ள சர்க்கரை நீர் கரைசலை உறிஞ்சி தேன் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கும். சர்க்கரை நீர் கரைசலை உறிஞ்சும் பொழுது தேனீக்கள் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழக்க வாய்ப்புள்ளதால் இலைகளை நீரின் மேல் பரப்பிவிட்டால் இலைகளின் மீதமர்ந்து சர்க்கரைக் கரைசலை லாவகமாக தேனீக்கள் உறிஞ்சிக்கொள்ளும். தேனுக்கான தேவையும் உற்பத்தியும் அதிகமாக இருந்து சரியான நேரத்தில் மக்களுக்கு தரமான பொருள்களை வழங்கினால்தான் கலப்படம் என்பதை தடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்போர் நலவாரியம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக தேனீ வளர்ப்போர் யாரையும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் தேனீ வளர்ப்போருக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நல உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை கிடைக்கப்பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு தேனீ வளர்ப்போர் நலவாரியத்தில் தேனீ வளர்ப்பில் ஈடுபடும் அனைவரையும் உறுப்பினராக சேர்ப்பதற்கு ஆவன செய்து வியாபார வாய்ப்பை பெருக்க வேண்டும்.
நியூசிலாந்து நாட்டில் தயாரிக்கப்படும் "மனுக்கா தேன்" எனப்படும் தேனுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தேனுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பும் நூறு மடங்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மனுக்கா தேனில் எண்ணிலடங்கா சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ளதாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மனுக்கா தேனுக்கு எந்தவகையிலும் முருங்கைத் தேன் குறைந்தது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முருங்கைத் தேன், ரப்பர் தேன், மலைத்தேன், கொம்புத்தேன், உள்ளிட்ட ஏதாவது ஒன்றுக்கு புவிசார் குறியீடு வழங்கினால் நமது தயாரிப்பை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு உதவிகரமாக இருக்கும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!