மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருப்பணி புத்தன்தருவை கிராமத்தில், அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
அங்கன்வாடி மையத்திற்கு அருகே உள்ள கோயில் நிர்வாகிகள் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் வசம் வைத்துக்கொண்டனர். இதற்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அரசு அலுவலர்கள் செயல்படுத்தவில்லை. எனவே, திருப்பணி புத்தன்தருவை கிராமம், உசரத்துக் குடியிருப்பில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி இடித்து அப்புறப்படுத்தும் படியும் கட்டிடத்தினையும், நிலத்தினையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, குழந்தைகள் பயன்பெறும் வகையில் அதே இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று (ஜூலை.6) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது கோயில் நிலத்தில் அங்கன்வாடி மையம் அமைத்தது எப்படி என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சொந்த வீடில்லை... உழைத்தப் பணத்தை மட்டுமே பயன்படுத்தினோம் - கிருத்திகா உருக்கம்!