தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
"தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள தா.ரங்கதாரா ரசாயன தொழிற்சாலை சட்ட விரோதமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீரை எடுத்து தொழிற்சாலைக்கு பயன்படுத்தி வருகிறது. அரசின் அனுமதியின்றி பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டார் நீரேற்று நிலையம் அமைத்து தாமிரபரணி ஆற்று நீரை 24 மணி நேரமும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எடுக்கப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. அரசின் அனுமதி பெறாமல் அதிகளவில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் எடுக்கப்படுவதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலை உரிய அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக விரிவாக்கம் செய்துள்ளனர்.
எனவே தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுகிறதா?ஆலைக் கழிவுகள் ஆறு மற்றும் கடலில் கலக்கப்படுகிறதா? ஆலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் குறிப்பாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதா? முறையான அனுமதியுடன் உரிமம் பெற்று ஆலை இயங்குகிறதா? தொழிற்சாலைகளின் ரசாயனங்கள் உரிய அனுமதியுடன் வெளியே எடுத்துச் செல்லப்படுகிறதா?
என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் மோகனை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கறிஞர் ஆணையராக நியமிப்பதாக உத்தரவிட்டனர். மேலும் வழக்கறிஞர் ஆணையர் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.