தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக் கூடும் எனவும், இதனால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதன்படி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (டிச.9) அதிகாலை 3 மணி முதல் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்க துவங்கி உள்ளது. இந்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார். மேலும், மழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல், தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக மழை பொழிய உள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ எதுவும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வேளச்சேரி கேஸ் பங்க் விபத்து; தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் தலைமறைவு.. போலீசார் தேடுதல் வேட்டை!